From Reader S. This marks our first Tamil publication, and we hope you enjoy the evocative imagery and deep emotions captured in this piece. I will try to translate this in the near future.
சூரியன் எனக்கு விடை சொல்லிக்கொண்டிருந்த
நேரத்தில் தான் அவளை பார்த்தேன்.
நான் வலது பக்கமாய் அணையின் தண்ணீரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கையில் இடதுபுறமாய் ஒரு தோழியுடன் வந்து புன்னகையாய் 'ஹாய்' சொன்னாள்...
அவளை நான் சந்திப்பது இதுதான் முதல்முறையாய் இருந்தாலும் பல காலமாக பழகியவள் போல இயல்பாக பேசினாள்...
எல்லோராலும் முடிந்த ஒன்றல்ல அது...
ஆனால் எனக்கு அவளிடம் சில விதிமுறைகள் இருந்தன...
ஏனென்றால் அவள் எனக்கு ஒரு தோழி மூலமாக அறிமுகமானவள்...
தோழிகளின் தோழிகளிடத்தில் அத்தனை எளிதாக உரிமை எடுத்துக்கொள்ள கூடாது...
அத்தனை எளிதாக நெருக்கமாக கூடாது என்று எழுதப்படாத விதி இருக்கிறது...
இதுதான் முதல்முறையாய் இந்த இடத்திற்கு வந்தது போலவே இல்லாமல் அத்தனை இயல்பாய் இருந்தாள்...
ஒரு காட்டு வழியே செல்லும் நீர்வீழ்ச்சிக்கு அவளை அழைத்து சென்றேன்...
கொஞ்சம் ஆசையுடனும் அதிக யோசனைகளுடனும் அவள் அந்த தண்ணீருக்குள் மிதக்க ஆரம்பித்தாள்...
தலைக்கு மேலிருந்து தாலாட்டு போல கொட்டிக்கொண்டிருந்த அந்த நீருக்கு அடியில் பெரும் தயக்கத்துடன் நின்றாள்...
அவளின் கூந்தல் தொட்டு தண்ணீர் கீழே விழுகையில் அவளை பார்த்தேன்...
இந்த உலகத்தில் எதுவும் பார்க்க கூடாதென்று முடிவு செய்தவள் போல கண்களை இறுக்கமாக மூடி இருந்தாள்...
போர்வை இல்லாத குளிர்காலம் போல அவளது உதடுகள் நடுங்கிக் கொண்டிருந்தது...
அவள் முகத்தில் ஒரு பயம் தெரிந்தது...
அது தண்ணீருக்குள் மூழ்கிவிடுவோம் என்று பயப்படுகிறாள் என்று நினைத்தேன்....
ஆனால் அவள் மனதிற்குள் ஏதோ ஒன்று அவளை மூழ்கடித்துக் கொண்டிருக்கிறது என்று புரிந்தது...
அவளுக்கு இந்த இடத்தை விட்டு உடனே விலகி செல்ல தோன்றவில்லை...
இருந்தாலும் போய்தானே ஆக வேண்டும்...
பறவைகளின் வாழ்க்கை பறந்துக்கொண்டே இருப்பதுதானே...
அடுத்த நாளில் என் ஞாபகங்களில் அவள் பறந்துக்கொண்டிருந்தாள்...
'மிஸ் யூ' என்று குறுஞ்செய்தி அனுப்பினேன்...
'நான் இன்னும் செத்துப்போகல' என்றாள்...
அந்த பதிலுக்கு பிறகு இப்போதெல்லாம் நான் யாரிடமும் 'மிஸ் யூ' சொல்வதில்லை...!
